sappotta



சிறு பறவையின் துணிச்சல்!
கன்னிக்கோவில் இராஜா
அந்த பூவரசு மரத்தில் இருக்கிறதே ஒரு சிறு பறவை... அது எப்போதும் தன் தாயுடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்தது.
அந்த சிறு பறவைக்கு பறக்கவும், நடக்கவும் தெரியும். ஆனாலும் இரைத் தேட செல்லாமல், தன் அம்மா கொண்டுவரும் இரையைத் தின்று, அம்மாவின் தோள்மீது சவாரி செய்யும். அதைத்தான் மிகவும் விரும்பியது.
அம்மா பறவை எவ்வளவோ சொல்லியும் தன் மனதை மாற்றிக் கொள்ளவே இல்லை.
என்னதான செய்வது இந்த பறவையை என நொந்துக் கொண்டது அம்மா பறவை.
ஒருநாள் சிறு தானியத்திற்காக தன் அம்மாவிடம் சண்டையிட ஆரம்பித்தது. சண்டையின் முடிவில் இனி யார் துணையும் எனக்குத் தேவையில்லை. நான் இங்கிருந்து செல்கிறேன். இனி தனியாகத்தான் இருப்பேன் என்று சொல்விட்டுப் பறந்தது.
அம்மா பறவை எவ்வளவு தடுத்தும் அது தாயின் பேச்சைக் கேட்காமல் கூட்டைவிட்டுப் பறந்தது.
கொஞ்ச தூரம் பறந்து சென்றதுமே அந்த சிறு பறவைக்கு பசிக்க ஆரம்பித்தது. ஒரு மரத்தில் இருந்த சிறு பழங்கள் அதன் கண்களுக்குத் தெரிந்தன. அதனை பசி தீர உண்டு முடித்து. இப்போது உடலுக்கு கொஞ்சம் தெம்பு ஏற்பட்டது.
அம்மாவிடம் சண்டைப் போட்டது ஞாபகத்திற்கு வர முன்பைவிட இன்னும் வேகவேகமாய் தனது இறக்கைகளை அடித்தபடி வெகுதூரம் பறந்து வந்துவிட்டது. இப்போது மீண்டும் பசி வயிற்றைக் கிள்ளியது.
சுற்றும் முற்றும் பார்த்தது. அப்போதுதான் அதை கவனித்தது. அந்த இடத்தில் ஒதுங்கக்கூட ஒரு மரமும் கண்களில் படவில்லை. ! என்ன இது! இந்த இடத்தில் ஒரு மரம் கூட இல்லையே என ஆச்சரியப்பட்டது. ஐயோ! வெயில் இப்படி காய்கிறதே என வருந்தியது.
சரி. இன்னும் கொஞ்ச தூரம் சென்று பார்க்கலாம் என்று நினைத்தபடி பறந்தது. ஆனாலும் எங்கும் ஒரு மரம்கூட இல்லை.
அதிக தூரம் பறந்து வந்த களைப்பு, பசி இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் கீழே இறங்கியது. நடந்தபடி ஏதாவது இரை கிடைக்குமா எனத் தேடியது. ஆனால் எதிர்பார்த்தது போல எங்குமே இரை கிடைக்கவில்லை. கொஞ்ச தூரத்தில் இறந்துபோன பறவைகளின் எலும்புகூடுகள் ஒன்றிரண்டு கிடந்தன.
அடடா! இங்கே உண்பதற்கு உணவில்லாமல் பறவைகள் இறந்து போயிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டது.
என்ன செய்யலாம் என யோசனை செய்து கொண்டிருந்தபோது மின்னலென அந்த யோசனை வந்தது.
சரி. நம் உடல்சோர்வை பெரிதுபடுத்தினால் இந்த இடத்தை விட்டு செல்ல முடியாது எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, மீண்டும் வந்த வழியே பறந்தது... பறந்தது... சோர்வு ஏற்படும்போதெல்லம் அந்த இடத்தை எப்படியும் வளமையாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை மனதிற்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டது. இப்போது உடலில் பலம் வந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
வேக வேகமாய் இறகை அடித்து முன்பிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதிக பசியாக இருந்ததால் பழங்களை உண்டது. இப்போது பசி அடங்கி உடல் அசதி போய் தெம்பு ஏற்பட்டது.
கொஞ்சநேரம் ஓய்வு எடுத்தபின், அவசர அவசரமாக அங்கிருந்த பறவைகளை அழைத்தது.
என்னாச்சு... எதற்கு இவ்வளவு அவசரம் என்று கேட்டபடி நிறைய பறவைகள் அந்த மரத்திற்கு பறந்து வந்தன. அந்த சிறு பறவையின் தாயும் வந்து சேர்ந்தது.
நண்பர்களே! நான் இங்கிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டிற்குப் பறந்து சென்றேன். அங்கே இளைப்பாற ஒரு மரம்கூட இல்லை. அதுமட்டுமல்ல இங்கிருந்து செல்கிற நம் பறவை நண்பர்கள் அங்கு உணவு கிடைக்காமல் இறந்து போயிருக்கிறார்கள் என்று தான் கண்ட காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னது.
சரி. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்றது ஒரு பறவை.
அதனைக் கேட்ட மற்ற பறவைகளும், ஆமா.. ஆமா.. நாம என்ன செய்ய முடியும் என்றன.
நாம, நமக்கு இங்கு கிடைக்கும் மர விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக அங்கே கொண்டு போய் போடலாம்... அந்த விதைகள் மழை பொழிய ஆரம்பித்த உடனே முளைக்க ஆரம்பித்துவிடும். இதை நாம ஒற்றுமையா செஞ்சா அதுவும் இந்த காடுபோல செழிப்பா மாறும் என்றது.
பறவைகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது வேண்டாத வேலை என்றது ஒரு பறவை
நமக்குத்தான் இந்த ஒரு காடு இருக்கே... பிறகு ஏன் அந்த காட்டை உருவாக்கணும் என்றது மற்றொரு பறவை.
அதுமட்டுமல்ல உயிரைப் பணயம் வைத்து அவ்வளவு தூரம் பறந்து சென்று அந்த வேலையை செய்யனுமா? என்றது இன்னொரு பறவை.
இப்படி ஒவ்வொரு பறவையாக ஒவ்வொன்றை சொன்னது.
யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் இங்கிருந்து விதைகளைக் கொண்டு சென்று, காட்டை உருவாக்க தயாராகிவிட்டேன். வருபவர்கள் வரலாம் என்றது அந்த சிறுபறவை.
நானும் துணைக்கு வருகிறேன் என்றது அம்மா பறவை.
இரண்டு பறவைகளின் தன்னம்பிக்கை சொற்களைக் கேட்டதும் ஒரு சில பறவைகள் நாங்களும் வருகிறோம் என்று சொல்லி இணைந்து கொண்டன.
அவை அனைத்தும் அந்தப் பொட்டல் காட்டிற்கு விதைகளை சுமந்து சென்று போட்டன. ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு பகுதியாக சென்று போட்டுவிட்டு வருவதை கடமையாக செய்தன.
இரண்டு மாதத்தில் மழைப் பொழியத் தொடங்கியது. பறவைகள் போட்ட விதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து, செடிகளாக முளைக்கத் தொடங்கின.
அடுத்தமுறை அந்த பறவைகள் செல்லும்போது அந்த செடிகள் மரங்களாக வளர்ந்து, பறவைகளை வரவேற்கக் காத்திருக்கும். எங்கேனும் மரங்கள் அதிகம் இருந்தால் அது அந்த சிறுபறவையின் போட்ட விதைகளாகத்தான் இருக்கும்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01