என்னைப் புரட்டிய கவிதை....

என்னைப் புரட்டிய கவிதை....
- கன்னிக்கோவில் இராஜா 

எப்போது என்னைக் காணும்போதும் புத்தகம் குறித்தே உரையாடலைத் தொடங்குவார்... அவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்கக் கொடுக்கும் போது, பிறந்த குழந்தையை வாங்கிக் கொள்வதைப் போல பெற்றக் கொள்வது எனக்குப் பிடித்தமானது.

இந்த முறை நண்பன் செந்தில்பாலாவின் 'வவ்வவ்வ' சிறுவர் பாடல் நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்னைக்கு வந்திருந்தவர், விழா முடிந்ததும் "இதை நீங்க வச்கிக்கங்க. யாருக்கு கொடுக்க வேண்டும் என உங்களுக்குத்தான் தெரியும்" என்றபடி கொடுத்த நூல் 'அறத்தான் வருவதே' என்ற நறுமுகை வெளியீடான குறிஞ்சிமலர் 2வது நூல். அதை அவசரத்தில் வாங்கி பையில் வைத்துவிட்டேன்

இன்று சற்றே ஓய்வு கிடைக்க அதை புரட்டினேன். ஒரு கவிதை என் கண்களை அப்பக்கத்திலியே நிறுத்தியது. அக்கவிதை ஏற்கனவே என்னைப் புரட்டியக் கவிதைதான். இன்று படித்த போது எனக்குப் பிடித்த "குழந்தையின் பாத வண்ண மலரை பிடிக்காமல் செய்த கவிதை.
ஏற்கனவே இந்நூலை வடிவமைப்பு செய்த போதும், அதன் பிறகும் பலமுறை படித்ததுதான்... ஆனாலும் முதல்முறை படிப்பவரை முழுவதுமாய் உள்வாங்க வைக்கும், லாவகத்தோடு, இன்று என்னையும் உள்ளிழுத்தது.

தன் எண்ணத்தை வெகு நாசுக்காய் சிறுமியோடு கவிதையாக்கியவர் இல்லோடு சிவா. இச்சிறுக் கட்டுரையில் முழுவதுமாய் என்னோடு பயணத்து, இந்த மலரை உருவாக்கியவர் நறுமுகை ஜெ.ரா.

இக்கவிதை உங்களைப் புரட்டுகிறதா என்று பாருங்கள்...

பூக்களைச் சேகரித்து விளையாடும்
காட்டுச் சிறுமி ஒருத்தியை
எனக்குத் தெரியும்

எல்லாப் பூக்களையும் ஏதோ
ஒன்றிற்காக அவளுக்குப் பிடிக்கும்

அவளைக் காண்கிற போதெல்லாம்
பூக்களின் கதைகளை அதன் வாசத்தோடு சொல்வாள்

மதமேறிய யானை மழலைகண்டு பின் வாங்கிய கதை
புலிகளின் கொஞ்சலை அருகிருந்து பார்த்த கதை
என யாரும் அறிந்திராத
விசித்திரக் கதைகளைச் சொல்வாள்

அவளைக் காணச் சென்றிருந்தபோது
அங்குக் காடுமில்லை
அவள் சிறுமியாயுமில்லை

பிழைப்புக்காகப் பதஞ்சலிக் கடையொன்றில்
வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள்

அவளுக்குப் பூவில் தா.ம.ரை மட்டும்
இப்போது பிடிக்கவில்லை

 இல்லோடு சிவா, 9003624066)

வாசித்துவிட்டீர்கள்தானே... கவிதையின் குறியீடான மலர் வாடிவிடும்; என்னிடம் உள்ள மலர் (குறிஞ்சிமலர்) வாடாது.. மற்றொரு கைகளில் தவழும்... தவழக்கூடிய கைகளுக்கு சொந்தக்காரர் யாரோ...

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01