வெற்றி விளிம்பில் முளைத்திருக்கும் மகிழ்மனம்!
Kannikovil Raja
எப்போதும் மகிழ்மனம் வாய்ப்பது ஒருசிலருக்கே அமைந்துவிடுகிறது. ஹைக்கூ புயலில் சிக்கிய படகாய் இருந்த காலந்தொட்டே அறிமுகமானவர்தான் என்றாலும், அவ்வப்போது மட்டுமே பார்த்து பேசுகிற வாய்ப்பே இருந்தது.
நண்பர் புதுவைத் தமிழ்நெஞ்சனுடன் புதுச்சேரியில் துளிப்பா நூற்றாண்டை கொண்டாட முயற்சித்த வேளையில் "தோழர் என்னுடைய நூலையும் வெளியிடலாமா?" என வினாக்குறியோடு அணுகியவர். அதுஎன்னவென்றே தெரியவில்லை. எப்போதும் யாருக்கும் அவ்வளவு விரைவாக நூலை வடிவமைத்துக் கொடுத்ததாய் சரித்திரம். பூகோளம் எதுவும் எனக்கில்லை. என் வேலை அதுமாதிரி. ஆனால் இவரின் (மகரந்தம் மறைத்த மொட்டு) நூல் இரண்டரை நாளில் வடிவமைத்து, அச்சடித்து வெளிவந்து நூல் வெளியீடும் நடந்தேறியது.

அதனை கருத்தில் கொண்டு இப்போது 'குளிர் தூவும் ஆறு" என்கிற தலைப்பில் அமைந்த புதுக்கவிதையின் உருவினூடே நவீனமாய் அமைந்த கவிதைகள் கொண்ட நூலைத் தந்தார். வழக்கம் போல் இந்நூலுக்கு தாமதம் ஆனது. ஆனால் என்னால் அல்ல.. அட்டைப்படத்தினால்... அதற்கு பாலமாய் அமைந்தவர் நறுமுகை ஜெ.ரா. இப்போதும் அக்கவிஞருக்கே வெற்றி. அவர் முனைவர் இரா. தமிழரசி. இந்நூலும் என்னைப் பொறுத்தவரை (அட்டைப்படம் நீங்கலாக) விரைவாகவே வெளிவந்துவிட்டது. இதில் பல கவிதைகள் நினைவில் நின்றாலும்... ஒரு பதச்சோறு... === பசுமையின் வாசனை === ஓர் இரவு மழையில் நிரம்பிவிடும் ஏரியாய் நிறைந்து தளும்பியது மனசு காம்பு கழன்று காற்றில் பறக்கும் பாரமற்ற இலையாய் மிதந்தலைகிறது இதயம் வனப்பை முடிந்துவைத்திருக்கும் வரப்புகளாய்த் தடைகளுக்குள் தளைத்திருப்பினும் வீசுகிறது பசுமையின் வாசனை பருவமாற்ற அபாயங்களினூடே பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை... அறுந்து விழுந்த மின்கம்பிகள் பற்றிய அச்சத்தோடு மாநகரக் கழிவுகளில் கால்கள் மூழ்க ஒரு நிதானத்தில் வீடடைந்து விடலாமெனும் நம்பிக்கையோடு...!
52 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு பேராசிரியர் முனைவர் இரா. சம்பத் அவர்களும், பேராசிரியர் முனைவர் பா. இரவிக்குமார் அவர்களும் அணிந்துரை அளித்திருக்கிறார்கள். ஆர்த்தி வெளியீடாக வந்துள்ள இந்நூலை வடிவமைத்தவன் என்கிற முறையில் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01