butterfly angel

நூல் விமர்சனம்

நிர்மலாதேவி பன்னீர்செல்வம்
மலேசியா.

நூல் : பட்டாம்பூச்சி தேவதை
நூலாசிரியர் : கன்னிக்கோவில் இராஜா
வெளியீடு : பாவைமதி வெளியீடு, எண். 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,தண்டையார்ப்பேட்டை, சென்னை - 600 081. ணூ94441 74272
112 பக்கங்கள்  விலை ₹100/-

பட்டாம்பூச்சியைப் பிடிக்காதக் குழந்தைகள் இலர். அவ்வகையில், கதாசிரியர் அவர்கள் குழந்தைகள் அதிகம் விரும்பும் பட்டாம்பூச்சியையே தன் கதையின் நாயகியாகத் தேர்ந்தெடுத்திருப்பது மிகச் சிறப்பு. மனிதனுக்கு மனம் இருப்பதைப் போல பிராணிகளுக்கும் இதயம் உண்டு என கதை அழகாகக் கூறுகிறது. தன் அன்றாட வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதன் எத்தனை பாடுபடுகிறானோ, அதுபோல பிராணிகளும் தனது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கு எத்தனை இடர்பாடுகளை ஒவ்வொரு நாளும் கடக்கின்றன என்பதை இக்கதையின் வழி நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

மென்மையான பட்டாம்பூச்சிக்கு கதையில் எதிரியாக முரலும் வண்டினை தேர்ந்தெடுத்திருப்பது மிக பொருத்தமாக அமையப்பெற்றுள்ளது. அவை இரண்டுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக இயல்பாகவும் குழந்தைத்தனமாகவும் எழுதப்பட்டிருப்பது, நிச்சயம் இக்கதையைப் படிக்கும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

மென்மையும் அமைதியும் கொண்டோரை ஏளனமாக எடை போடக்கூடாது என, இக்கதையைப் படிக்கும் குழந்தைகள் உணர்ந்துகொள்ளும் வகையில் கதை அமைந்துள்ளது. இதைத்தவிர, கதையின் முடிவில் நூதனமாக அறிவியலையும் புகுத்தி இருப்பது நடப்புத் தேவைக்கு மிக பொருத்தமான ஒன்று.

மொத்தத்தில், குழந்தைகள் படிக்கும் போதே ஒரு பூங்காவனத்தில் தாங்கள் இருப்பதாய் உணர்வர். காரணம், கதாசிரியர் அத்துணை அழகாகக் காட்சியைக் கதையில் கொண்டு வருகிறார். அதே வேளையில் உணர்ந்தும் எழுதியுள்ளார்.

ஏதோ கதையைப் படித்தோம் என்றில்லாமல், கதையின் முடிவில் நல்லதொரு அறிவியல் சிந்தனையைப் பெற்றோம் என்ற ஆத்ம திருப்தியில் மனம் நிறைவு கொள்கிறது. குழந்தைக் கதாசிரியர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Comments

Popular posts from this blog

Dinamalar book review

New Book

Lollipop books 01