Kanavu Meeting

படைப்பு அனுபவ உரை

திருப்பூர் - தமிழ்நாடு | இணையவழி 06-02-2022

கனவு மெய்நிகர் சந்திப்பில் படைப்பாளர்களின் அனுபவத்தை பலரும் தெரிந்துக் கொள்ள நிகழ்வு நடத்தப்பட்டது. மாதந்தோறும் பல படைப்பாளர்கள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிப்ரவரி 6, சனிக்கிழமை மாலை எழுத்தாளர்கள் அய்யப்ப மாதவன் (கோவை), கன்னிக்கோவில் இராஜா (சென்னை) நாராயணி கண்ணகி (ஜோலார்பேட்டை) ஆகியேரர் பங்கேற்றனர்.

மூத்த எழுத்தாளர் பூ. அ. ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை சிறந்த கவிதையோடு தொடங்கி வைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் முன்னிலை பல சான்றேரர்களின் கருத்துரையோடு தூரிகை சின்னராஜ் ஒருங்கிணைப்பு செய்தார்.

இந்நிகழ்வில் தன்னுடைய நாவல் அனுபவத்தையும், தான் சார்ந்த மண்ணையும் அங்கு நிலவும் சூழலையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார் எழுத்தாளர் நாராயணி கண்ணகி அவர்கள். அவருக்கு பிறகு பேசிய எழுத்தாளர் அய்யப்ப மாதவன், படைப்பாளர்களின் தற்கால யதார்த்த வாழ்வையும், படைப்புகள் குறித்தும், பதிப்பகங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்,.

சிறுவர் இலக்கியத்தில் இயங்கி வரும் கன்னிக்கோவில் இராஜா, ஊரடங்கு காலத்தில் சிறுவர்களின் மனநிலை, அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், சவால்கள் குறித்தும், அவர்கள் கதைசொல்லிகளாகவும், கதை ஆசிரியர்களாகவும். மாறியதை பகிர்ந்து கொண்டார். இணையத்தில் எவ்வகையில் தனது படைப்புகளை நிலைநாட்டுவது என்பதையும் எளிமையாக பகிர்ந்தார். 

இந்நிகழ்வுக்கு மாணாக்கள், ஆசிரியர்கள், சான்றேரர்களின் கருத்துகள் வலுசேர்த்தன. இந்நிகழ்வில் கன்னிக்கோவில் இராஜா குறித்த அறிமுக உரை வாசிப்பின் சுருக்கம்.


எழுத்தாளரை அறிவோம் : 

எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் | தூரிகை சின்னராஜ்

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த மயிலாப்பூரில் பிறந்த எழுத்தாளரான இவர், குமாரராஜா முத்தையா நடுநிலைப்பள்ளி, இராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்தில் புலவர் தமிழ்நாவன் ஐயா அவர்களின் மூலம் தமிழ்ப்பற்று ஏற்பட்டு, ஏழாம் வகுப்பு முதலே கவிதைகள் எழுதத் தொடங்கியவர்.

பள்ளிக்கு அருகில் இருந்த வன்னியம்பதி கிளை நூலகமும், வீட்டின் அருகே இருந்த தேவநேய பாவாணர் நூலகமுமே இவரின் இலக்கியப் பயணத்திற்கு ஆணிவேராக அமைந்தவை.

தன் தாத்தா, எந்த ஒரு செய்தியையும் சுவைபட நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருப்பதைப் பார்த்தபிறகு இவர் செல்லும் இடங்களையும் சந்திக்கும் மனிதர்களையும் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தினத்தந்தி - குடும்பமலர், கல்கண்டு, முத்தாரம், கல்கி கேள்வி-பதில் பகுதி எனப் பல இதழ்களில் படைப்புகளை அனுப்பி வெளிவந்த போதிலும், இவரது படைப்புகளை நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை இவரின் மனதில் விதைத்தவர்... பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்பால் ஈடுபாடு கொண்ட சுப்புரத்தினதாசனாக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தான்.


‘கவிதை உறவு’ மற்றும் ‘உரத்த சிந்தனை’ இதழ்கள் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கவிஞர் சுப. சந்திரசேகரன் மற்றும் கவிஞர்கள் பலரின் நட்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். 

ஹைக்கூ மற்றும் அதன் கிளை வடிவங்களை ஈடுபாடு ஏற்பட்டு பல படைப்புகளை படைத்திருக்கிறார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்களின் அறிமுகத்திற்கு பிறகு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வாயிலாக கவிஞர் உதயகண்ணன் இவரின் ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘தொப்புள்கொடி’ என்கிற ஹைக்கூ நூலாகக் கொண்டுவந்து இலக்கியப் பாதையை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.

ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என ஹைக்கூவின் கிளை வடிவங்களை உள்வாங்கிய இவர், ‘லிமர்புன்’ என்கிற புதிய வடிவத்தையும் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இன்று பலரும் முகநூலிலும் இதழ்களிலும் லிமர்புன் எழுதி வருகிறார்கள்.

பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் வழிகாட்டுதலில் குழந்தைப் பாடல் எழுதி வந்த இவருக்கு தினமணி சிறுவர்மணி நல் ஆதரவை நல்கியது. இவருடன் இணைந்து பல தொகுப்பு நூல்களையும், ஹைக்கூ நிகழ்வுகளையும் நடத்தி உள்ளார். ‘துளிப்பா தேனடை’ என்ற பெயரில் தமிழ் இலக்கிய உலகிற்கு ஹைக்கூவின் பங்கை பறைசாற்றும் விதமாக தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் குறித்த அடைவு நூலை வெளியிட்டு, அதனை இலசவசமாக வழங்கி உள்ளார். 

முனைவர் ஆ.இராஜா - கவிஞர் சு. கணேஷ்குமார் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்த ‘புதிய செம்பருத்தி’ இதழின் ஆசிரியர் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு, இதழ் பயணத்தை ஆரம்பித்து ‘பொதிகை மின்னல்’, ‘அரும்பின் புன்னகை’, ‘நடுநிசி’, ‘எருது’, போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற பின்னர் ‘மின்மினி ஹைக்கூ’ இதழின் ஆசிரியராகவும் அறிமுகமானார். இன்று அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ‘நூலேணி’ மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறார்.

ஹைக்கூ மற்றும் புதுக்கவிதை 7 நூல்களும், சிறுவர் கதை 26 நூல்களும், சிறுவர் பாடல்கள் 6 நூல்களும், சிறுவர்கள் கதைப்பாடல் 7 நூல்களும் கட்டுரை 1 நூலும் வெளியிட்டு உள்ளார்.

ஊரடங்கு காலத்தில் ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ என்ற புலனக் குழுவை உருவாக்கி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நாள்தோறும் ‘இந்த நாள் சிறப்பு நாள்’ என ஒவ்வொரு நாளின் சிறப்பை ஓவியமாக வரையவும், வெள்ளிக்கிழமைதோறும் கதைப் பாடலை பாடவும், ஞாயிற்றுக்கிழமை தோறும் கதைப் பயிற்சி அளித்து மாணவர்களை கதைகள் எழுதவும், அதை நூலாக வெளியிடவும் செய்து வருகிறார்.

உலகமெங்கும் உள்ள கதைசொல்லிகள் இவரின் கதைகளை ஒலிவடிவில் சொல்லி வருகிறார்கள்.. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி அவர்கள் ‘பேசும் கதைகள்’ என்ற பெயரில் கதைப் பாடலையும், கதைகளையும் ஒலிவடிவில் சொல்லி வருகிறார்.

மலேசியாவில் வசிக்கும் கவிஞர் / ஆசிரியர் நிர்மலாதேவி பன்னீர்செல்வம் அவர்களும் இவரின் கதைகளை அங்குள்ள வானொலியில் ஒளிபரப்பு செய்கிறார். இவரது கதைப் பயிற்சி காணொளியை மலேசிய தமிழ்ப் பள்ளியில் கவிஞர் / ஆசிரியர்  புனிதா சுப்பிரமணியம் அவர்களும் ஒளிபரப்பு செய்து வருகிறார்.

தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி, ஜெர்மனி தமிழருவி வானொலி, கலாட்டா நெட்டிசன் - கலிபோர்னியா, தமிழ் எம்.டிவி டெலிவிஷன் - ஜெர்மனி ஆகியவற்றில் பன்னாட்டு குழந்தைகள் இவரின் கதைகளைச் சொல்லி வருகிறார்கள்.

‘பாட்டாலே இணைவோம்’ என்ற நிகழ்ச்சியில் இவரது பாடல்களையும், ‘கதை கதையாம் காரணமாம்’ என்ற நிகழ்ச்சியில் இவரது கதைகளையும் மக்கள் தொலைக்காட்சி அனிமேஷன் வடிவில் ஒளிபரப்பி வருகிறது. 

குழந்தைக் கவிஞர் பணிச் செல்வர் திரு வெங்கட்ராமன் ஐயா அவர்களுடன் இணைந்து ‘குழந்தைக் கவிஞர் பேரவை’யின் செயலாளராகவும் இயங்கி வருகிறார்.


மலேசிய பல்கலைக்கழகமும் கலைஞன் பதிப்பகமும்  இணைந்து நடத்திய சிறுவர் கதைகள் போட்டியில் இவரின் கதைகள் வெற்றி பெற்றது. அதனை ‘தங்கமீன்கள் சொன்ன கதைகள்’ என்ற பெயரில் பிரசுரம் செய்து மலேசியாவில் வெளியிட்டது. அதேபோன்று எழுத்து அமைப்பு நடத்திய சிறுவர் இலக்கிய போட்டியில் இவரது கதைகள் ‘பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்’ என்ற பெயரில் நூலாக்கி கவிப்பேரரசு வைரமுத்து, நீதியரசர் இராம.சுப்ரமணியம் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

இவரது படைப்புகளைப் பலர் எம்ஃபில் ஆய்வு செய்து வருகிறார்கள். சிறுவர் இலக்கிய உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பல அமைப்புகள் வழங்கி இருக்கின்றன. இத்தனை சிறப்புக்குரிய எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்களை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

Lollipop

Dinamalar book review

மரக்குதிரை